திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.104 திருக்கடிக்குளம்
பண் - நட்டராகம்
பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
    புரியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
    குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
    துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
    முன்வினை மூடாவே.
1
விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
    விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும்
    வள்ளலை மருவித்தங்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்
    துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
    பழியிலர் புகழாமே.
2
பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
    புலியதள் அழல்நாகந்
தங்க மங்கையைப் பாகம துடையவர்
    தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
    துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை
    இடும்பைவந் தடையாவே.
3
நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
    தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை
    பசும்பொன்னை விசும்பாருங்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
    துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
    தேய்வது திணமே.
4
சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
    துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல
    கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்
    துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்
    விதியுடை யவர்தாமே.
5
மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
    டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
    புரிசடைக கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
    துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
    பற்றாக் கெடுமன்றே.
6
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
    குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
    பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
    துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவு நின்றுநின் றேத்துவார் மேல்வினை
    நிற்ககில் லாதானே.
7
மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்
    மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற
    இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்
    கடிக்குளந் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்
    குணமுடை யவர்தாமே.
8
நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
    நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
    பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்
    துறையுங்கற் பகத்தின்றன்
சீரி னார்கழ லேத்தவல் லார்களைத்
    தீவினை யடையாவே.
9
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
    குறியினல் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
    கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்
    துறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
    தூநெறி எளிதாமே.
10
தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்
    மன்னன்நற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்
    மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வந் துலவிய
    கடிக்குளத் தமர்வானை
இமன லிந்திசை பாடவல் லார்கள்போய்
    இறைவனோ டுறைவாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com